நஞ்சை சம்பா நெல் நாற்றுநடவு பணிகள் தொடக்கம்
முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
நஞ்சை சம்பா நெல்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு ஆகிய வருவாய் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
இதன்படி முதல் கட்டமாக கீழ்பவானி பாசன விவசாயிகள் ஐ.ஆர்.20, கோ 41,கோ 43, டீலக்ஸ் பொன்னி உட்பட பல்வேறு ரக விதை நெல் மணிகளை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நெல் விற்பனை நிலையங்களில் வாங்கி வந்து இருப்பு வைத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தங்களது வேளாண் வயல்களில் நெல் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணிகளை தொடங்கினர்.
நெல் நடவு பணிநஞ்சை சம்பா நெல் நாற்றுநடவு பணிகள் தொடக்கம்கள்
நெல் நாற்றுக்கள் வயல்களில் இருந்து எடுக்கப்பட்டு தண்ணீர் நிரம்பிய வயல்கள் சமன்படுத்தப்பட்ட டிராக்டர் மூலம் இயற்கை தொழு உரங்கள் அடியில் செல்லும் விதமாக சேற்று உழவு பணிகள் செய்யப்பட்டது. பின்னர் இப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக நெல் நடவு எந்திரம் மற்றும் கூலி ஆட்கள் மூலம் நெல் நடவு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணிகள் தொடர்ந்து சுமார் ஒரு மாத காலம் வரை விறுவிறுப்பாக நடைபெறும்.
முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு தோறும் ஒற்றைப்படை, இரட்டைப்படை மதகுகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சாதாரண மற்றும் திருந்திய நெல் சாகுபடிக்கு பவானிசாகர் அணை தண்ணீருடன் மழைநீர் முக்கியமான தேவையாகும். ஆனால் இந்த ஆண்டு இப்பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகளுக்கு தற்போது வரை போதிய மழை பெய்யாமல் குறைந்த அளவே மழை பெய்து உள்ளது.