உடைமாற்றும் அறையில் இருந்த செல்போனின் மர்ம முடிச்சுகள்


உடைமாற்றும் அறையில் இருந்த செல்போனின் மர்ம முடிச்சுகள்
x
தினத்தந்தி 26 Jun 2023 6:45 PM GMT (Updated: 26 Jun 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூரில் பிரபல ஜவுளிக்கடையில் உடைமாற்றும் அறையில் இருந்த செல்போனின் மர்ம முடிச்சுகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

உடைமாற்றும் அறையில் கேமரா

திருக்கோவிலூர் மேலவீதியில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிரபல ஜவுளிக்கடையில் உடை மாற்றும் அறைக்கு சென்ற பெண் அந்த அறையின் மேல் இருந்த கண்ணாடியை சந்தேகத்தின் பேரில் கையால் தட்டிப்பார்த்தபோது அதில் இருந்து செல்போன் ஒன்று கீழே விழுந்தது. உடனே அந்த அறைக்கு வெளியே நின்றிருந்த ஒரு பெண் ஓடிச்சென்று அந்த செல்போன், அதில் இருந்து விழுந்த சிம்கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் விசாரணை

முதல் கட்டமாக உடைமாற்றும் அறையில் இருந்து கீழே விழுந்த செல்போனை எடுத்த பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணுக்கும் உடைமாற்றும் அறையில் இருந்த செல்போனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது.

இதுபற்றி அந்த பெண் கூறும்போது, சம்பவம் நடந்ததற்கு முந்தையநாள் நான் இங்கு வந்து இதே உடைமாற்றும் அறையில் எடுத்த துணியை அளவு சரியாக இருக்கிறதா? என்று போட்டு பார்த்தேன். ஆனால் என்னிடம் பணம் குறைவாக இருந்ததால் மறநாள் வந்து வாங்கி செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன். பின்னர் மறுநாள் நான் பணத்துடன் ஜவுளிக்கடைக்கு வந்தபோது உடை மாற்றும் அறையில் கேமரா இருப்பதாக பெண் ஒருவர் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் ஒருவேளை எனது படம் ஏதேனும் செல்போனில் பதிவாகி இருக்குமோ? என்ற அச்சத்தில் தான் ஓடிச்சென்று அந்த செல்போனை எடுத்தேனே தவிர, மற்றபடி எனக்கும், அந்த செல்போனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

கண்காணிப்பு கேமரா

பின்னர், கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் நேற்று காலை முதல் தீவிர விசாரணை மேற்கொண்டதுடன் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி உரிய நிபுணர்களை வரவழைத்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

வேலை நேரத்தில் கடையில் செல்போன் பேச முடியாத நிர்பந்தம் உள்ள காரணத்தால் யாராவது ஊழியர் உடை மாற்றும் அறையில் செல்போனை ரகசியமாக பதுக்கி வைத்திருக்கலாம் என போலீசாரின் கவனம் வேறு விதத்தில் திரும்பி விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் கடை ஊழியர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிப்பதால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் இன்னும் அதிகரித்துள்ளது.

அச்சப்பட தேவையில்லை

இது ஒருபுறம் இருக்க இந்த செல்போன் விவகாரத்தை பொறுத்தவரை பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை? இது சாதாரண பட்டன் செல்போன் தான், டச் போன் இல்லை எனவும், எனவே பெரிய அளவிலான தவறுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர். இதனால் அந்த உடை மாற்றும் அறைக்கு சென்று வந்த பெண்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

ஆனாலும் செல்போனின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாததால் அதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிந்த பின் முழு அறிக்கையும் வெளியிடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story