நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு


நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 25 Sep 2023 5:24 AM GMT (Updated: 26 Sep 2023 4:51 AM GMT)

நாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ், பிரவின், திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கோடியக்கரை தென்கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அத்துமீறி 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களிடம் கத்தி முனையில் மீன்கள் மற்றும் தளவாட பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். பின்னர் கத்தி முனையில் நாகை மீனவர்களின் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ வலை, 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி , 4 செல்போன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் படுகாயங்களுடன் செருதூர் மீன் இறங்குதளத்திற்கு வந்த மீனவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர், போலீஸ் சூப்பிரண்டு ஜோதிராமலிங்கம் நாகை மீனவர்களை தாக்கி மீன் மற்றும் வலைகளை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story