கடலூர் அருகேசொட்டுநீர் பாசனம் மூலம் பன்னீர் கரும்பு சாகுபடிகலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு
கடலூர் அருகே சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்ட பன்னீர் கரும்புகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.
கடலூர் அருகே உள்ள சேடப்பாளையம் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் தென்னந்தோப்பில் காய்க்காத மரங்களை அகற்றி புதிய தென்னங்கன்றுகள் நடுதல் திட்டத்தின்கீழ், தென்னந்தோப்பில் பாதிக்கப்பட்ட மரங்களை அப்புறப்படுத்தி புதிய கன்றுகளை நடும் பணி நடைபெற்றது. இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், தென்னையில் வேளாண் துறையால் அளிக்கப்பட்ட மணிலா ஊடுபயிரின் அறுவடையின்போது மணிலாவிற்கு நியாயமான விலை கிடைப்பதற்காக விவசாயிகள் உற்பத்தி குழு அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் சேடப்பாளையம் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் - ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கு காப்பீட்டுக்கான குறியிடுதல் பணிகளை ஆய்வு செய்தார்.
சொட்டு நீர் பாசனம்
அதனை தொடர்ந்து ராமாபுரம் கிராமத்தில் பிரதமரின் விவசாயிகள் பாசன திட்டத்தின்கீழ், வயலில் சொட்டுநீர் பாசன முறையில் சாகுபடி செய்யப்பட்ட பன்னீர் கரும்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கடலூர் வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் ஜெயக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) பிரேம்சாந்தி, வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், கால்நடை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார், வேளாண்மை அலுவலர் பொன்னிவளவன், கால்நடை மருத்துவர் நிக்சன், வேளாண்மை உதவி அலுவலர்கள் சங்கரதாஸ், விஜயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.