மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் குளிக்க தடை


மயிலாடும்பாறை அருகே  யானை கஜம் அருவியில் குளிக்க தடை
x

மயிலாடும்பாறை அருகே யானை கஜம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தேனி

மயிலாடும்பாறை அருகே சதுரகிரி மலையடிவாரத்தில் யானை கஜம் அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியில், மழைக்காலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது வழக்கம். அப்போது, அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்தநிலையில் தற்போது அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதற்கிடையே சதுரகிரி மலைப்பகுதி ஸ்ரீவில்லி புத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் யானைகஜம் அருவிக்கு யாரையும் வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. ஆனால் அதனையும் மீறி சுற்றுலா பயணிகள் சிலர் யானை கஜம் அருவியில் அனுமதியின்றி குளித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த வாரம் அனுமதியின்றி குளித்ததற்காக சுற்றுலா பயணிகள் 4 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் வனத்துறையினர் அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து யானை கஜம் பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வருசநாடு வனச்சரகர் சாந்தவர்மன் கூறுகையில், யானை கஜம் அருவி புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளது. எனவே வனத்துறையினர் அனுமதி இன்றி பொதுமக்கள் யாரும் யானை கஜம் அருவிக்கு செல்லக்கூடாது. அதனை மீறி யானை கஜம் அருவிக்கு சென்று குளிப்போர் மீது வனத்துறை சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story