திருச்செந்தூர் அருகே ஓலை செட்டில் 80 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே ஓலை செட்டில் 80 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே ஓலை செட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 80 மூட்டை பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பதுக்கிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீடி இலைகள்
திருச்செந்தூர் பகுதியில் கடலோர போலீசார் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆலந்தலையில் இருந்து நா.முத்தையாபுரம் செல்லும் பாதையில் காட்டுப்பகுதியில் இருந்த ஒரு ஓலை செட்டின் உள்ளே 80 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்த மூட்டைகளை போலீசார் சோதனை செய்தபோது, அவற்றில் பீடி இலைகள் இருந்தன.
அந்த மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பதுக்கியவர்கள் யார்?
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த ஓலைக்குடிசை யாருக்கு சொந்தமானது? என உடனடியாக தெரியவில்லை. இந்த பீடி இலை மூட்டைகள் மர்ம நபர்கள் ஓலைக்குடிசையில் பதுக்கி வைத்து, இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அங்கு பறிமுதல் செய்த பீடி இலை மூட்டைகளை திருச்செந்தூர் தாலுகா போலீசாரிடம் கடலோர காவல்படையினர் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து, அந்த ஓலைக்குடிசையில் பீடி இலை மூட்டைகளை பதுக்கி வைத்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.