நீட் போராட்டம்; தமிழ்நாட்டின் போராட்டம்! மாநில உரிமைகளுக்கான போராட்டம்! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


நீட் போராட்டம்; தமிழ்நாட்டின் போராட்டம்! மாநில உரிமைகளுக்கான போராட்டம்! - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

போலி அறிவியலை திணிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு வருகின்றன‌ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4-வது மாநாடு மற்றும் 20-ம் ஆண்டு தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:-

உலகளவில் அறிவியல் துறையில் நடக்கும் புதிய ஆராய்ச்சிகளையும் மருத்துவத்துறையில் ஏற்படுகிற வளர்ச்சிகளையும் உடனுக்குடன் கவனித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்துவதன் விளைவாகத்தான் பன்னோக்கு மருத்துவமனைகள், சிறப்பு நோக்கு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் சிறப்பான சிகிச்சையை வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைக்கும் வகையில், முதலில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. மாணவி அனிதா தொடங்கி மாணவர் ஜெகதீஸ்வரன் வரை பல பேரின் உயிரை நீட் என்கிற கொடுவாள் பறித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டத்தை நாம் உறுதியோடு முன்னெடுத்திருக்கிறோம்.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற ஆணவத்தோடு யார் பேசினாலும், எந்தப் பதவியில் இருப்பவர்கள் சொன்னாலும், நீட் விலக்கு என்கிற நம் இலக்கு, மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும். அதற்காக தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி இணைந்து உங்களைப் போன்றவர்களின் ஆதரவோடு தொடங்கிய கையெழுத்து இயக்கம், இன்றைக்கு மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது.

நாம் நீட்டை எதிர்க்கும் நேரத்தில், நெக்ஸ்ட் தேர்வு என்று அடுத்த ஆபத்து நுழைகிறது. அதையும் வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்பதை நிரூபித்து காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதன் காரணமாக, தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுப்பெற்றுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்களைக் குறைப்பதற்கும், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கும் மத்திய அரசு தடை விதிக்கும் போக்கையும் எதிர்த்தோம்.

அதுபோலவே, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவ இடங்களுக்கான ஒற்றைச் சாளர முறையிலான மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொள்ளும் எதேச்சதிகாரப் போக்கை மேற்கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் மாநில உரிமைகளையும், மருத்துவக் கட்டமைப்பையும் சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஜனநாயக அறப்போர்க் களமாக சமூக சமத்துவ டாக்டர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இது உங்கள் போராட்டம் இல்லை, எங்கள் போராட்டம்! தமிழ்நாட்டின் போராட்டம்! மாநில உரிமைகளுக்கான போராட்டம்! அந்த உரிமைப் போராட்டத்தில் எப்போதும் துணைநிற்போம். நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு, மருத்துவக் கல்வியில் மாநிலத்தின் உரிமை ஆகியவற்றோடு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த உரிமைப் போரில் நாம் நிச்சயம் வெல்வோம். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்


Next Story