தூத்துக்குடியில் 'நெய்தல் கலைவிழா' தொடங்கியது


தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழா தொடங்கியது
x

தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழாவை கனிமொழி எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், கலை, நாகரிகம் போன்றவற்றை பறைசாற்றும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நெய்தல் கலைவிழா நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஸ்பிக் நிறுவன முழுநேர இயக்குனர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் ஜெகன்பெரியசாமி வரவேற்று பேசினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

நம்முடைய மண் சார்ந்த கலைகள் ஒரு பொக்கிஷம். கிராமிய பாடல்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பதிவு செய்து உள்ளன. வெள்ளம், வறட்சி, வெளியூருக்கு வேலைக்கு செல்லுதல், சின்ன, சின்ன கனவுகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்யக்கூடியது நம் மண் சார்ந்த கலைகள்தான். அந்த கலைகளில் தான் நம் சமூகத்தை பார்த்த கேள்விகள் உள்ளன. சமூகத்தில் நாம் எதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, சமூகத்தின் மீது உள்ள விமர்சனங்கள், கேள்விகளை தொடர்ந்து முன்வைக்கும் விஷயமாக இந்த மண் சார்ந்த இசை, கலைகள் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கின்றன. இந்த கலை வடிவங்கள் உயிர்ப்போடு இருக்கக்கூடியவை ஆகும்.

நம்முடைய வாழ்க்கையோடு அதனுடைய பயணங்களும் உள்ளன. நம்முடைய வாழ்க்கைக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கான பாடல்களும் உள்ளன. இந்த கலை வடிவங்கள் உயிர்ப்போடு வாழ்க்கையை, சமூகத்தை, கேள்விகளை, நம் அரசியலை எடுத்து முன்வைக்க கூடியதாக இருக்க வேண்டும். இந்த கலைவடிவங்கள் அந்த வேலையை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றன. இதனை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் கலைஞர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டு இருந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த நிகழ்வுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். உணவும், கலைகளும் தான் நம் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும். இல்லையென்றால் அகழ்வாராய்ச்சி செய்துதான் எடுத்து வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தூத்துக்குடி மாணவர்களின் பறையாட்ட நிகழ்ச்சி நடந்தது. நையாண்டி மேளம், காவடியாட்டம், பறையாட்டம், ஜிக்காட்டம், புலியாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதுதவிர உணவுத்திருவிழா, மகளிர் சுயஉதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியும் இடம்பெற்றது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), தமிழரசி (மானாமதுரை), துணை மேயர் ஜெனிட்டா, தி.மு.க. மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ நன்றி கூறினார். இந்த நெய்தல் கலைவிழா வருகிற 10-ந் தேதி வரை தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது.


Next Story