நெல்லை: நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டம் - முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது


நெல்லை: நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டம் - முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது
x

போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

20 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை ஜாதி, மத, வழக்கு பேதமின்றி விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாளையங்கோட்டை மத்திய சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையை முற்றுகையிடுவதற்காக தமிமுன் அன்சாரி தலைமையில் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் மேலப்பாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை போலீசார் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். இன்று நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.



Next Story