நெல்லை: தாமிரபரணி ஆற்றில் தொடர்து 3-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு


நெல்லை: தாமிரபரணி ஆற்றில் தொடர்து 3-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2023 2:44 PM GMT (Updated: 31 Dec 2023 3:03 PM GMT)

அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை,

தென் மாவட்டங்களில் கடந்த 16, 17-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்போது மீண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் ஏற்கெனவே பெய்த மழையின் காரணமாக நிரம்பியுள்ளது.

இதன் காரணமாக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து 3-வது நாளாக இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், காட்டாற்று வெள்ளம் அனைத்தும் சேர்ந்து 10 ஆயிரம் கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் வந்துகொண்டிருக்கிறது.

அணைகளில் இருந்து திறக்கப்படும் நீர் மற்றும் ஆற்றில் வரும் நீரின் அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரில் கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் இரு கரைகளையும் தொட்டவாறு தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.


Next Story