ரூ.358 கோடியில் புதிய குடியிருப்புகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்


ரூ.358 கோடியில் புதிய குடியிருப்புகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
x

ரூ.358 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய 3,010 குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து உயர்கல்வி படிக்க சென்னைக்கு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்க ஏதுவாக சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டு மறைந்த முதல்-அமைச்சர் காமராஜரால் 15.12.1961 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதுவரையில் 25 ஆயிரம் மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி உயர் கல்வி பெற்று பயனடைந்துள்ளனர்.

2022-23-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை எம்.சி. ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதிக் கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதால் அங்கு 484 மாணவர்கள் தங்குமளவிற்கு, தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கூடிய 121 தங்கும் அறைகள், நூலகம், உடற்பயிற்சிக்கூடம், பார்வையாளர் அறை, பன்னோக்கு அரங்கம் ஆகிய நவீன வசதிகளுடன் ரூ.44.50 கோடி செலவில் விடுதிக் கட்டிடம் கட்டும் பணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

புதிய குடியிருப்புகள்

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சென்னையில் சந்தோஷ்நகர் பகுதி 1 திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மறுகட்டுமான திட்டத்தின் கீழ் தூண் மற்றும் 14 தளங்களுடன் 410 புதிய குடியிருப்புகள், சந்தோஷ் நகர் பகுதி 2-ல் தூண் மற்றும் 14 தளங்களுடன் 150 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி 1 திட்டப்பகுதியில் தூண் மற்றும் 9 தளங்களுடன் 648 புதிய குடியிருப்புகள், மூலகொத்தளம் பகுதி 2-ல் தூண் மற்றும் 11 தளங்களுடன் 396 புதிய குடியிருப்புகள்;

செங்கல்பட்டு மாவட்டம், அன்னை அஞ்சுகம்நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் 2 தளங்களுடன் 192 அடுக்குமாடி குடியிருப்புகள், காயரம்பேடு திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 64 அடுக்குமாடி குடியிருப்புகள், பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் தரை மற்றும் 7 தளங்களுடன்480 புதிய குடியிருப்புகள்; என மொத்தம் ரூ.358.15 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3,010 குடியிருப்புகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்து, இக்குடியிருப்பிற்கான 902 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

இப்புதிய குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ரூ.1,583.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 15 ஆயிரத்து 505 அடுக்குமாடி குடியிருப்புகள், வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை

மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் உயர்கல்வி பயிலும் 100 மாணவர்களுக்கு டிபிஎஸ் வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தலா ரூ.25 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ.25 லட்சம் வழங்கிடும் அடையாளமாக 5 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை அமைந்தகரை முள்ளத்திலும், மயிலாப்பூரிலும், திருவான்மியூரிலும், கோவை வடக்கு வட்டம், கணபதி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகக் கட்டிடங்கள் மற்றும் சென்னை மாதவரம் மாத்தூரில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம்;

சென்னை திருவான்மியூரில் தூண்தளம் மற்றும் 5 தளங்களைக் கொண்ட 10 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; என மொத்தம் ரூ.276.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகக் கட்டிடங்கள், வாரிய பிரிவு அலுவலகக் கட்டிடம், சமுதாயக்கூடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், முத்துசாமி, ரகுபதி, மா.சுப்பிரமணியன், கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

வலைதள பதிவு

எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன் புதிதாக கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:-

இன்னார் படிக்கலாம் இன்னாரெல்லாம் படிக்கக் கூடாதென இருந்த சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம். கல்வியைத் தேடிச் சென்னை வரும் நமது மாணவர்கள் தங்கியிருக்க 'திராவிடர் இல்லம்' நிறுவினார் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நடேசனார்.

கல்வி மூலமாகவே ஒடுக்கப்பட்டோர் வளர்ச்சி காண முடியும் என உரிமை முழக்கம் செய்து, இரவுப் பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கினார் எம்.சி.ராஜா. அவரது பெயரில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் பயில, 1961-ம் ஆண்டில் விடுதி அமைத்தார் பெருந்தலைவர் காமராஜர். அந்த விடுதியை நவீன வசதிகளுடன் புதுப்பித்துக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, மாணவர்களுடன் உரையாடினேன்.

மாணவர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல், கல்வி மட்டுமே நம்மைக் காக்கும் சொத்து. கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story