கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய நூலகம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய நூலகம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கலெக்டர் அலுவலகம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பிற நாட்களில் பல்வேறு பணிகள் நிமிர்த்தமாக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலகத்தில் நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட நிர்வாகம் மற்றும் நூலகத்துறை உதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில்...
கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதி அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு நூல்கள், நாளிதழ்கள் வைக்க ரேக்குகள், நின்று கொண்டு நாளிதழ் வாசிக்கும் வகையில் சாய்வு பலகை, குறிப்புகள் எடுக்கும் வகையில் பலகை, வாசகர்கள் அமரும் வகையில் பெஞ்சுகள் என நூலகம் தயாராகி வருகிறது.
மேலும் நூலக கதவு புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலான நூல்களும் இந்த நூலகத்தில் இடம்பெற உள்ளது. இந்நிலையில் நூலக பணிகள் விரைவில் முடிவடைந்து நூலகம் திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வர உள்ளது.