புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி மீண்டும் தொடக்கம்


புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி மீண்டும் தொடக்கம்
x

புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

ரேஷன் கார்டுகள் மூலம் சலுகை விலையில் மக்களுக்கு தேவையான அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பருப்புகள், பாமாயில் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

உணவு பொருள் பெறுவதற்கு மட்டுமின்றி அரசின் பல்வேறு பொருட்கள், சலுகைகள் ஆகியவற்றை பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் முக்கிய துருப்பு அட்டையாக உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் ரேஷன் கார்டுகள் அனைத்தும் 'ஸ்மார்ட் கார்டு'களாக மாற்றி வழங்கப்பட்டன. அதாவது ஆதார் மற்றும் செல்போன் எண் இணைக்கப்பட்டு இந்த 'ஸ்மார்ட் கார்டுகள்' வழங்கப்பட்டன.

இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வந்த வேளையில் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அதன்பின் மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்தது.

தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். இவர்களுக்கு பல மாதங்களாக கார்டுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சிலருக்கு 'உங்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஒப்புதல் ஆகிவிட்டது' என்ற குறுஞ்செய்தி வந்தது. அவர்களுக்கு கார்டுகள் வழங்கவிருந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியது. எனவே அவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.

தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும், மேலும் புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.


Next Story
  • chat