குன்றக்குடியில் ரூ.5½ லட்சத்தில் புதிய மின்மாற்றி


குன்றக்குடியில் ரூ.5½ லட்சத்தில் புதிய மின்மாற்றி
x
தினத்தந்தி 10 July 2023 7:15 PM GMT (Updated: 10 July 2023 7:15 PM GMT)

குன்றக்குடியில் ரூ.5½ லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

திருப்பத்தூர்

குன்றக்குடியில் ரூ.5½ லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

திட்ட பணிகள் தொடக்க விழா

சிங்கம்புணரி மற்றும் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவு பெற்ற பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல்லை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நாட்டி வைத்தும், முடிந்த பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 2 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீரான வளர்ச்சியை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதியிலும், திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மின்மாற்றி

அதில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கும் வகையில் செவரக்கோட்டை ஊராட்சியில் ரூ.14 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானியக்கிட்டங்கி, கள்ளிப்பட்டு ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவுக்கூடம், கண்டரமாணிக்கம் ஊராட்சியில் ரூ.6 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை கட்டிடம், தனியார் பங்களிப்புடன் (கண்டரமாணிக்க வளர்ச்சிக்குழு) ரூ.11.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும், குன்றக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் ரூ.5.64 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி என மொத்தம் 5 முடிவுற்ற வளர்ச்சித் திட்ட பணிகள் ரூ.43.89 லட்சம் மதிப்பீட்டில் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட மேம்பாலம்

மேலும் முன்னாள் அமைச்சர் மாதவன் குடும்பத்தினர் சார்பில் 28.5 சென்ட் இடம் அரசின் பயன்பாட்டிற்கு தற்போது வழங்கியுள்ளனர். அதன் மூலம் அந்த இடத்தில் படிப்பு பயிற்சி மையம் ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.மாம்பட்டி ஊராட்சியிலுள்ள ஒப்பிலான்பட்டியில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் இரா.சிவராமன், கோட்டப்பொறியாளர் (பரமக்குடி, நபார்டு மற்றும் கிராம சாலைகள்) முரளிதர், உதவி கோட்டப்பொறியாளர் சென்றாயன், உதவி பொறியாளர் தவநிதி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் லதாதேவி, உதவி செயற்பொறியாளர் கணேசன், கல்லல் யூனியன் தலைவர் சொர்ணம் அசோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சரி லெட்சுமணன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story