நீலகிரி, கோவையில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


நீலகிரி, கோவையில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
x

தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவையில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினமும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு கன முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (சனிக்கிழமை) சில பகுதிகளில் கன முதல் மிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் (மலைப் பகுதிகளில்) சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். மிக கன மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்பட கூடிய 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 'மேல் பவானி, அவலாஞ்சி 32 செ.மீ., கூடலூர் பஜார் 17 செ.மீ., மேல் கூடலூர் 16 செ.மீ., சோலையாறு 13 செ.மீ., சின்னக்கல்லாறு, எமரால்டு, வால்பாறை தலா 11 செ.மீ., பந்தலூர் தாலுகா அலுவலகம், கிளென்மார்கன், தேவாலா தலா 10 செ.மீ. உள்பட சில இடங்களில் கன முதல் மிதமான மழை பெய்துள்ளது.

1 More update

Next Story