நீலகிரியில் பீன்ஸ் கொள்முதல் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி


நீலகிரியில் பீன்ஸ் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரியில் பீன்ஸ் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைக்காய்கறிகள்

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளின் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், அவரை, பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி ஒரு சில விவசாயிகள் புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட ஆங்கில காய்கறிகளையும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.

பீன்ஸ் கொள்முதல்

நீலகிரியில் விளையும் புஷ் பீன்ஸ் தரம் மிக்கதாகவும் சைவ பிரியாணி, பாஸ்ட் புட் ஆகியவற்றுக்கு அதிகம் பயன்படுத்தப் படுவதாலும், இதற்கு எப்பொழுதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த பயிர் முற்றாத நிலையில் புஷ் பீன்ஸ் ஆகவும், நன்கு முற்றிய பயிர்களில் உள்ள விதைகள் அவரைக் கொட்டைகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பச்சையாக விற்பனை செய்தாலும், முற்ற விட்டு விதைகளாக விற்பனை செய்தாலும் இதற்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வருவதால், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன், நெடுகுளா, எரிசிபெட்டா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அதிக அளவில் புஷ் பீன்ஸ் பயிரிட்டுள்ளனர். அவை தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்தநிலையில் காய்கறி மண்டிகளில் புஷ் பீன்சுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைப்பதால், அதை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களுக்கு முன்பு புஷ் பீன்ஸ் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.80 ஆக இருந்தது. ஆனால் தற்போது முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷங்களுக்கு புஷ் பீன்ஸ் வாங்குவது அதிகரித்து வருவதால், சந்தையில் அதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் கொள்முதல் விலை உயர்ந்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் புஷ் பீன்ஸ் கிலோ ரூ.133-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எனவே அதைப் பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story