எனக்கு அழைப்பு வந்துள்ளது.. ராமர் கோவில் விழாவில் பங்கேற்பேன்: நித்யானந்தா அதிரடி


எனக்கு அழைப்பு வந்துள்ளது.. ராமர் கோவில் விழாவில் பங்கேற்பேன்: நித்யானந்தா அதிரடி
x

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவும் தனக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான கோவில் கட்டப்பட்டுள்ளது. நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம் 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கும். கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம், மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டுள்ளது.

கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில், கோவில் வளாகம் முழுவதும் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வந்தவண்ணம் உள்ளனர். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் என பலருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷே விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவும் தனக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:- "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள் . ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பாரம்பரிய முறைப்படி அழைக்கப்படுகிறார். அவர் ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார்."முறையாக அழைக்கப்பட்டதன் பேரில், இந்து மதத்தின் பகவான், ஸ்ரீ நித்யானந்தா இந்த பிரமான்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்" என்று பதிவிட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்தியானந்தா, தற்போது கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். இந்த நிலையில் தான் நித்யானந்தா நாளை ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறியிருக்கிறார்.


Next Story