"ஒடிசா ரெயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை.." - சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி பேட்டி


ஒடிசா ரெயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை..  - சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி பேட்டி
x
தினத்தந்தி 4 Jun 2023 12:46 PM GMT (Updated: 4 Jun 2023 1:02 PM GMT)

8 பேரின் தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 2 பேரின் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் தமிழகர்கள் 30 பேர் முன்பதிவு செய்த நிலையில், 8 பேரை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருந்தநிலையில், அதில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்திருந்தது. கோவையை சேர்ந்த நாரகணிகோபி, சென்னையை சேர்ந்த ஜெகதீசன் ஆகிய இருவரும் வீடு திரும்பினர்.

இதனால் தொடர்பு கொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. மீதமுள்ள கார்த்திக், ரகுநாதன், மீனா, கல்பனா, அருண், கமல் ஆகிய 6 பேரின் நிலை குறித்து விசாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தகவல் தெரிந்தவர்கள் 044-28593990, 94458 69843 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில் ஒடிசா சென்றிருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் குழு, தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் சென்னை திரும்பினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நேரடியாக மருத்துமனைக்கு சென்று ஆய்வு நடத்தியதில் அங்கு தமிழர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிணவறைக்கு சென்று பார்வையிட்டோம். அங்கும் தமிழர்கள் யாரும் இல்லை என்று தெரிய வந்தது. பின்னர் அங்கிருந்த அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம்.

அவர்களும் எங்கும் தமிழர்கள் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. 8 பேரின் தகவல் இல்லாமல் இருந்த நிலையில், 2 பேரின் தகவல் கிடைத்துள்ளது. மற்ற 6 பேரும் (அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்திக்) நலமுடன் உள்ளதாக, அவர்களுடன் உடன் பயணித்த நபர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

எங்களுடன் வந்த அதிகாரிகள் குழு ஒடிசாவில் உள்ளனர். விரைவில் முழுமையான தகவல் வரும். வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.


Next Story