சிற்றாறு பகுதியில் வீட்டில் இருந்து மாலை 6 மணிக்கு பிறகு யாரும் வெளியே வர வேண்டாம்
சிற்றாறு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால் மாலை 6 மணிக்கு பிறகு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறை அதிகாரி ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளார்.
குலசேகரம்:
சிற்றாறு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால் மாலை 6 மணிக்கு பிறகு யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறை அதிகாரி ஒலிபெருக்கி மூலம் அறிவித்துள்ளார்.
புலி நடமாட்டம்
அரசு ரப்பர் கழகம் சிற்றாறு தொழிலாளர் குடியிருப்பில் கடந்த 5-ந் தேதி புலி புகுந்து ஒரு ஆட்டை அடித்துச் சென்றது. அதைத்தொடர்ந்து 8-ந் தேதி இரவில் பசுமாட்டை கடித்துக் குதறியது. இதில் பசுமாட்டின் அலறல் சத்தம் கேட்டு, குடியிருப்பு தொழிலாளர்கள் வந்ததால் புலி தப்பி ஓடியது.
இந்த சம்பவங்களை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளையராஜாவின் மேற்பார்வையில் களியல் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வனத்துறையினர் இரவு, பகலாக சிற்றாறு குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் கேமராக்களில் புலியின் உருவம் பதிந்தால் உடனே அதனை கூண்டு வைத்து பிடிக்கும் திட்டமும் வனத்துறையிடம் உள்ளது.
வெளியே வர வேண்டாம்
புலி நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சமடைந்து கடந்த 10-ந் தேதி முதல் 2 நாட்கள் பால்வடிப்புக்கு செல்லவில்லை. ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து நேற்று முதல் தொழிலாளர்கள் பால் வடிப்புக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வனச்சரக அலுவலர் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வனத்துறையினர் வாகனத்தில் வந்து ஒலி பெருக்கி மூலம், 'சிற்றாறு தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக தெரிய வருவதால், மாலை 6 மணிக்கு பிறகு வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம். மேலும் கால்நடைகளை தொழுவத்தில் கட்டி வைக்க வேண்டும்' என்றும் அறிவித்தனர்.
இதனால் அந்த பகுதி மக்கள் மேலும் அச்சத்தில் மூழ்கி உள்ளனர்.