அரசு துறையின் தலைவராக அரசியல் சார்புள்ளவர் நியமனம்: தி.மு.க. இரட்டை வேடம் - எடப்பாடி பழனிசாமி சாடல்

ஹசன் முகமது ஜின்னாவை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குனர் பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அரசு துறையின் தலைவராக அரசியல் சார்புள்ளவர் நியமனம்: தி.மு.க. இரட்டை வேடம் - எடப்பாடி பழனிசாமி சாடல்
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டின் குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குனர் (Director of Prosecution) 31.1.2024 அன்று சுய விருப்பின் அடிப்படையில் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது, மாநில குற்றவியல் அரசு தலைமை வக்கீலை (State Public Prosecutor) குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குனர் பதவியில் இந்த தி.மு.க. அரசு நியமித்துள்ளது.

பொதுவாக முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்படி தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட Asst. Prosecutor-ஆக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பதவி உயர்வின் மூலம் Director of Prosecution ஆக நியமிக்கப்படுவது மரபு.

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களைக் கடுமையாக எதிர்ப்பதாக ஒருபுறம் கூறிவிட்டு, மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டப்பிரிவு 20(2)(a) Bharatiya Nagarik Suraksha Sanhita 2023-ன் படி, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட வக்கீல் ஹசன் முகமது ஜின்னாவை, குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு)-ஆக (Director of Prosecution Incharge) நியமித்திருப்பது விந்தையானது. அரசு துறையின் தலைவராக அரசியல் சார்புள்ள ஒருவரை இந்த தி.மு.க. அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது தவறான முன்னுதாரணமாகும்.

ஒருபுறம் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை எதிர்ப்பதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், உண்ணாவிரதம் இருப்பதும், மறுபுறம் தனக்குச் சாதகமான உட்பிரிவை பயன்படுத்திக்கொள்வதுமாக தி.மு.க. தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றியுள்ளது. ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இந்த இயக்குனரகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர்களுடைய நியாயமான பணி உயர்வு இதனால் பாதிப்படைந்துள்ளது. எனவே, அரசியல் சார்புள்ள வக்கீல் ஒருவரை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குனர் பதவிக்கு நியமிக்கக்கூடாது என்றும், வக்கீல் ஹசன் முகமது ஜின்னாவை அப்பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com