கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரக்கோரி நூதன ஆர்ப்பாட்டம்
வைகை அணையில் இருந்து கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரக்கோரி நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டியில் திருச்சுழி ராமசாமி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீரை கால்வாய் வெட்டி தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வத்தலக்குண்டுவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் போஸ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுருளி ஆண்டவர், மாவட்ட தலைவர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணைகளின் உபரி நீரை கால்வாய் வெட்டி எழுவனம்பட்டி திருச்சுழி ராமசாமி கண்மாய்க்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது, காமாட்சிபுரத்தை சேர்ந்த தேவராட்டக்குழுவினர் தேவராட்டம் ஆடி நூதனமுறையில் கோரிக்கையை வலியுறுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.