காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த டிரைவரின் உயிரை காப்பாற்றிய நர்சு - பொதுமக்கள் பாராட்டு


காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த டிரைவரின் உயிரை காப்பாற்றிய நர்சு - பொதுமக்கள் பாராட்டு
x

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த டிரைவரின் உயிரை காப்பாற்றிய நர்சை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 9 ஆண்டுகளாக நர்சாக பணிபுரிந்து வருபவர் விஜய நிர்மலா சிவா. இவர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு சொந்த ஊரான கம்மவார்பாளையம் செல்வதற்காக காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் காத்து கொண்டிருந்தார்.

அவர் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்து 20 அடி தூரம் தள்ளி ஒரு முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். பேச்சு மூச்சின்றி கீழே விழுந்து கிடந்த முதியவரை சுற்றி ஏராளமானோர் கூடி விட்டனர்.

இதை பார்த்த விஜய நிர்மலா சிவா சற்றும் தாமதிக்காமல், நாடி துடிப்புகள் குறைவாகி பேச்சு மூச்சின்றி அபாய கட்டத்தில் இருந்த முதியவருக்கு எந்தவித மருத்துவ உபகரணங்களும் இன்றி இதய சுவாச மறு உயிர்ப்பு சிகிச்சை முறையில் தீவிரமான முதலுதவி சிகிச்சையை மேற்கொண்டார்.

சற்று நேரத்திலேயே அந்த முதியவருக்கு சுயநினைவு திரும்பியது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முதியவர் இறந்து விட்டார் என்றே கருதிய நிலையில் அவருக்கு நினைவு திரும்பியதை கண்டு மிகவும் ஆச்சரியமுற்றனர்.

அது மட்டுமல்லாமல் ஆம்புலன்சை வரவழைத்து அதில் அந்த முதியவரை ஏற்றி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அங்குள்ள டாக்டர்களுக்கு விஜய நிர்மலா சிவா தகவல் தெரிவித்தார்.

தன்னுடைய பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்து கொண்டிருந்த அரசு நர்சு ஒருவர், கீழே விழுந்து பேச்சு மூச்சின்றி உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை எந்த விதமான மருத்துவ உபகரணங்களுமின்றி சிகிச்சை அளித்து அந்த முதியவரை காப்பாற்றியது பலரது பாராட்டை பெற்றது.

விசாரணையில் அந்த முதியவரின் பெயர் ராஜேந்திரன் (வயது 68) என்றும், அவர் போக்குவரத்து துறையில் டிரைவராக பணிபுரிந்து 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்று தற்போது பஸ் நிலையத்தின் அருகே உள்ள 4 கடைகளை நடத்தி வருவதும் தெரியவந்தது.

மேலும் ராஜேந்திரனின் ஒரு மகன் டாக்டராகவும் மற்றொருவர் மருந்து கடை வைத்துள்ளதாகவும் கூறினர்.


Next Story