விளையாட்டு மைதானத்தில் மழைநீர் ஓடை அமைக்க எதிர்ப்பு


விளையாட்டு மைதானத்தில் மழைநீர் ஓடை அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே விளையாட்டு மைதானத்தில் மழைநீர் ஓடை அமைக்க 2 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் அருகே விளையாட்டு மைதானத்தில் மழைநீர் ஓடை அமைக்க 2 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளையாட்டு மைதானம்

குளச்சல் அருகே உள்ளது சைமன்காலனியில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருகின்றன. மழைக்காலத்தில் விளையாட்டு மைதானத்தில் வெள்ளம் பெருகுவதால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதையடுத்து நேற்று காலையில் மழை நீர் வழிந்து ஓட வசதியாக மைதானத்தின் தெற்கு பகுதியில் இளைஞர்கள் ஓடை அமைக்க தோண்டினர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த 2 குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த ஊர் மக்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, சைமன்காலனி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அரசிடம் முறையாக அனுமதி பெற்று ஓடை அமைக்க கட்டுமான பணிகள் செய்ய வேண்டும் என தாசில்தார் மற்றும் போலீசார் கூறினர். இதை இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கலைந்து சென்றனர்

அப்போது மைதானத்தில் பெருகும் மழை வெள்ளம் வெளியேற இடையூறு இல்லாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்வது எனவும், இது தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) பத்மநாபபுரம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அத்துடன் மழைநீர் ஓடை அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story