வராண்டாவில் செயல்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகம்
வால்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகம் வராண்டாவில் செயல்படுகிறது. இதற்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
வால்பாறை
வால்பாறையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலகம் வராண்டாவில் செயல்படுகிறது. இதற்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
வால்பாறை பகுதியில் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்கள், அதற்காக அரசு அறிவித்துள்ள உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று வந்தனர். இதனால் பிரசவித்த பெண்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு ஆனைமலைக்கு செல்ல வேண்டும் அல்லது குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும். ஆனால் மலைப்பகுதியில் பயணம் செய்வது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.
அவர்களது சிரமத்தை போக்கும் வகையில் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து மாதத்திற்கு 2 முறை அல்லது 3 முறை அதற்கான ஊர் நல பெண் அதிகாரி வால்பாறைக்கு வந்து விண்ணப்ப படிவங்களை பெற்று செல்வார்.
அலுவலகத்துக்கு இடம்
ஆனால் அவருக்கு அலுவலகம் இல்லை. இதனால் அந்த திட்டம் முறையாக பொதுமக்களை சென்றடைய முடியாத நிலை உள்ளது. தற்போது நகராட்சி அலுவலகத்தின் வராண்டாவில் அந்த திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு வரும் தாய்மார்கள் அமருவதற்கு கூட இடம் இல்லாத நிலை இருந்து வருகிறது. அவர்களிடம் இருந்து பெறும் விண்ணப்ப படிவங்களை பத்திரமாக வைப்பதற்க்கு இடம் இல்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பணிக்காக அலுவலகம் ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை என்றால், அதிகாரி வருவது நின்றுவிடும். பின்னர் நாங்கள் வரும் நாட்களில் ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே நகராட்சி அல்லது வருவாய் துறை அதிகாரிகள் அலுவலகத்துக்கு இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றனர்.