திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்


திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆய்வு

காரைக்குடி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் சிவகங்கை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஆகியவை குறித்து குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.112 கோடியே 53 லட்சத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாள் ஒன்றிக்கு 16 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பணி ஆய்வுகள் முடிவில் எஞ்சியுள்ள தேனாற்றின் குறுக்கே கழிவுநீர் தன்னோட்ட குழாய் அமைக்கும் பணி வரும் அக்டோபர் மாதம் 15-ந் ்தேதிக்குள்ளும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் எஞ்சியுள்ள பணிகள் முழுவதும் அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் திட்ட பணிகள்

நகராட்சி மூலம் வீட்டு இணைப்புகள் டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் முடித்து அடுத்தாண்டு தொடக்கத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 4 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 11 யூனியன்களில் ரூ.1752.73 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தேனம்மாள்பட்டியில் உள்ள 146 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி பணி, எஸ்.வி.மங்கலம், கண்டனூர் அருகில் குழாய் பதிக்கும் பணி, பள்ளத்தூரில் 2.20 லட்சம் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி, சூரக்குடியில் 6.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு தொட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆய்வின் போது காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி, மேற்பார்வை பொறியாளர் (திட்ட கோட்டம்) ஜீவலதா, நிர்வாக பொறியாளர் (பாதாள சாக்கடை திட்டம்) நிர்மலா, நகராட்சி ஆணையாளர் லெட்சுமணன், தாசில்தார் மாணிக்க வாசகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story