திருத்தணியில் 'லியோ' படம் வெளியாகும் தியேட்டர்களில் அதிகாரிகள் ஆய்வு


திருத்தணியில் லியோ படம் வெளியாகும் தியேட்டர்களில் அதிகாரிகள் ஆய்வு
x

திருத்தணியில் ‘லியோ' படம் வெளியாகும் தியேட்டர்களில் வருவாய் ஆர்.டி.ஓ. மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டு, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.

திருவள்ளூர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள லியோ திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் லியோ படத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

அந்த குழுவை சேர்ந்த திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபா, துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், தாசில்தார் மதன், இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் ஆகியோர் திருத்தணியில் 'லியோ' படம் திரையிடப்பட உள்ள தியேட்டர்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசு அனுமதியின்றி தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றினர்.

மேலும் திரையரங்கு உரிமையாளர்களிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது, தியேட்டர்களில் கூட்ட நெரிசல் மற்றும் சுகாதார குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், திரைப்படம் காண்போரின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும், விதிகளை பின்பற்றாவிட்டால் தியேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என வருவாய் ஆர்.டி.ஓ., தீபா தெரிவித்தார்.


Next Story