தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 15 மலைப்பாம்பு குட்டிகள் - திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை


தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 15 மலைப்பாம்பு குட்டிகள் - திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
x

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 15 மலைப்பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்க அணில் ஆகியவற்றை திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை

சென்னை மீனம்பக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 35 வயது வாலிபர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் இருந்த கூடையில் உயிருள்ள ஏதோ ஒரு பொருள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், கூடையை திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதில் காடுகளில் வாழும் 15 மலைப்பாம்பு குட்டிகள், 1 அரிய வகை ஆப்பிரிக்க அணில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி பயணியிடம் விசாரித்தபோது, அவை அபூர்வ வகை குட்டிகள் என்பதால் அவற்றை வீட்டில் வளர்க்க எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறினார்.

ஆனால் அவரிடம் விலங்குகளுக்கான எந்த ஆவணங்களும், மருத்துவ பரிசோதனை செய்து நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா?, இல்லையா? என்பதற்கான சான்றிதழும் இல்லை. மேலும் சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.

ஆனால் எந்தவிதமான சான்றிதழ்களும் அவரிடம் இல்லாததால் அபூர்வ உயிரினங்களை பறிமுதல் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள், விமான நிலையம் வந்து பார்த்தபோது இவை அபூர்வ வகையை சேர்ந்தது என்பது உறுதியானது.

இதையடுத்து பறிமுதல் செய்த மலைப்பாம்பு குட்டிகள், அணில் ஆகியவற்றை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story