வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்


வெள்ளக்காடாக மாறிய ஒகேனக்கல்
x

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடானது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் வெள்ளக்காடானது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக, கேரள மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் வெள்ளக்காடாக மாறி காட்சி அளிக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ஐந்தருவிகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

மேலும் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

1 More update

Next Story