சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் பலி: உறவினர்கள் மறியல்


சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் பலி: உறவினர்கள் மறியல்
x

குளித்தலையில் சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் பலியானார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கரூர்

டிராக்டர் மோதி முதியவர் பலி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுமருதூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு மேட்டுமருதூரில் இருந்து தனது சைக்கிளில் பணிக்கம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர், ஆறுமுகம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமா இறந்தார். இதையடுத்து குளித்தலை போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இதற்கிடையில் ஆறுமுகத்தின் மீது மோதிய டிராக்டர் தான். ஆனால் குளித்தலை போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், குற்றம்சாட்டி போலீசாரை கண்டித்து நேற்று காலை குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு உள்ள திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகத்தின் உறவினர்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிராக்டர் என்று வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story