கரூர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை
கரூர் உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
காய்கறிகள் விலை ஏறுமுகம்
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி, இஞ்சி உள்ளிட்டவை தங்கத்தின் விலையை போல தினமும் அதிகரித்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி திடீரென விலை உயர்ந்தது. ஜூலை மாதம் தொடக்கத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி நேரடி கொள்முதல்
இதையடுத்து கரூர் மாவட்டத்தில் தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கும் வகையில் தோட்டக்கலை- மலை பயிர்கள் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி கரூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் இயங்கி வரும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை விற்பனை மையம், வேளாண் வணிகத்துறை மூலம் முதல் கட்டமாக 300 கிலோ தக்காளி விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது.
ரூ.80-க்கு விற்பனை
இதையடுத்து பொதுமக்களுக்கு 1 கிலோ தக்காளி ரூ.80-க்கு நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனையை தோட்டக்கலை துணை இயக்குனர் மணிமேகலை தொடங்கி வைத்தார். இதையடுத்து பொதுமக்கள் தக்காளிகளை அதிகளவில் வாங்கி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுதாதேவி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கவிதா, நவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.