கோவில்பட்டி அருகே வியாபாரிகள் சங்கம் சார்பில்புதிய தினசரி சந்தை தொடங்கியது


கோவில்பட்டி அருகே வியாபாரிகள் சங்கம் சார்பில் புதிய தினசரி சந்தை தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் புதிய தினசரி சந்தை நேற்று தொடங்கியது. அங்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

தினசரி சந்தை இடிப்பு

கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தையில் உள்ள 360 கடைகளை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கடைகளை இடிக்காமல், மாற்று இடத்தில் புதிய தினசரி சந்தையை கட்டுமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டவாறு நகராட்சி சந்தையில் புதிய சந்தை கட்ட முடிவு செய்தது. இதற்காக நேற்று முன்தினம் காலை 5.30 மணி அளவில் பழைய கடைகளை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியது. 3 பொகலைன் எந்திரங்கள் மூலம் பழைய கடைகள் இடித்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதிய சந்தை திறப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 14 வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், எட்டயபுரம் ரோட்டில் தெற்கு திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பு பகுதியில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் 120 மொத்த வியாபார கடைகளும், 120 சில்லறை வியாபார கடைகளும் கட்ட தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக 5 ஏக்கரில் 40 மொத்த வியாபார கடைகளும் 40 சில்லறை கடைகளும் அமைக்கப்பட்டது. அங்கு நேற்று காலையில் வியாபாரிகள் வியாபாரத்தை தொடங்கினர். விரைவில் மீதமுள்ள 5 ஏக்கரில் கடைகள் அமைக்கப்படும். அத்துடன் கழிவறை வசதியும் செய்து தரப்படும் என்று வியாபாரிகள் சங்க தலைவர் அழகுராஜன், செயலாளர் அரவிந்தசாமி, பொருளாளர் சின்ன மாடசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

மளிகைகடைக்காரர்கள் இடம் மாறவில்லை

இடிக்கப்பட்ட தினசரி சந்தையில் இருந்த மளிகை கடைக்காரர்கள் சங்கத்தினர் அமைத்துள்ள புதிய சந்தைக்கு இடம் மாறவில்லை. பழைய சந்தை அருகிலேயே புதிய இடத்தில் வாடகைக்கு கடைகளை பிடித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய சந்தையில் கடை அமைத்துள்ள வியாபாரி ஒருவர் கூறுகையில், புதிதாக கட்டப்படும் சந்தையில் எங்களுக்கு மீண்டும் கடை கிடைக்காது. நாங்கள் நகராட்சி நிர்வாகத்திடம் ஒரு வருட கடை வாடகையை முன்பணமாக செலுத்தி இருக்கிறோம். அந்த பணத்தை நகராட்சி நிர்வாகம் விரைவாக எங்களுக்கு திருப்பி தரவேண்டும்' என்றார்.

, .


Next Story