காவிரி நதிநீரை தர மறுக்கும் கர் நாடகா மீதுவழக்கு தொடர தயங்குவது ஏன்? தமிழக அரசுக்கு சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி


காவிரி நதிநீரை தர மறுக்கும் கர் நாடகா மீதுவழக்கு தொடர தயங்குவது ஏன்? தமிழக அரசுக்கு சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி
x

காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம்

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி விழுப்புரத்தில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், ராஜா, வளவனூர் நகர செயலாளர் முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் திலீபன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது சி.வி.சண்முகம் எம்.பி. பேசியதாவது:-

மக்களுக்காக பாடுபடும் இயக்கம்

தமிழகத்தில் 32 ஆண்டுகள் ஆட்சி செய்த முதல் கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் இருப்பவர்கள் அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீட்டெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தி.மு.க.வை போன்று குடும்ப கட்சி அ.தி.மு.க. அல்ல. யார் வேண்டுமானாலும் இக்கட்சியில் பதவிக்கு வரலாம். ஆனால் தி.மு.க.வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று குடும்ப உறுப்பினர்கள்தான் பதவிக்கு வருகிறார்கள்.

கர்நாடகாவில் காங்கிரசும், பா.ஜ.க.வும் எலியும் பூனையுமாக இருந்தாலும் காவிரிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாதென இரு கட்சிகளும் உறுதியாக இருக்கின்றனர். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் காவிரி நீர் விவகாரத்தில் தண்ணீர் தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஸ்டாலின் ஏன் தொடரவில்லை.

துரோகம்

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யாரென்று தி.மு.க. கூறினால் அடுத்த நொடியே நாங்கள் எங்களது பிரதமர் வேட்பாளர் யாரென்று கூறுவோம். யார் பிரதமராக வந்தாலும் இதுவரை தமிழகத்திற்கு துரோகம்தான் இழைத்துள்ளார்கள். எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

மத்தியில் யார் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. தமிழக மக்களின் நலன் மட்டுமே எங்களுக்கு முக்கியம். மத்திய அரசுக்கு நாங்கள் அழுத்தத்தை கொடுத்து சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை பெற்றுத்தருவதே எங்கள் நோக்கம்.

நாடாளுமன்ற தேர்தலில் தயவு செய்து சிந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டலும் மக்களுக்காக போராடுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க.

இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவி

தொடர்ந்து, ஏழை, எளிய மக்கள் 500 பேருக்கு தையல் எந்திரம், வேட்டி- சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் அற்புதவேல், விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் டாக்டர் முத்தையன், துணை செயலாளர் திருப்பதி பாலாஜி, இணை செயலாளர் செங்குட்டுவன், பொருளாளர் ரகுநாதன், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், முன்னாள் நகர செயலாளர் ஜானகிராமன், நகரமன்ற கவுன்சிலர்கள் ஆவின் செல்வம், கோதண்டராமன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் ஜெகதீஸ்வரி சத்யராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

1 More update

Next Story