மாட்டுவண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பலி
ஆம்பூர் அருகே மாட்டுவண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பலியானார். ஒருவர் காயமடைந்தார்.
ஆம்பூர் அடுத்த சானாங்குப்பம் பகுதியை சேர்ந்தவரகள்் செல்வநாதன் (வயது 60). கார்த்திகேயன் (25). இவர்கள் நேற்று இரவு வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஆம்பூர் கன்னிகாபுரம் சாலையில் வந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் செல்வநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் செல்வநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த கார்த்திகேயனை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.