சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு


சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
x

நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காய்கறிகள் விலை அதிகமாக இருந்தது. இதில் குறிப்பாக தக்காளி விலை கிலோ ரூ.200 வரை சென்றது. இஞ்சி விலையும் எகிறி இருந்தது.

அதன் பிறகு சில வாரங்களாக காய்கறிகள் விலை குறைந்தது. இந்தநிலையில் தற்போது பல்லாரி, சின்ன வெங்காயம், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.20-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் ரூ.80-க்கு விற்பனையான நிலையில் நேற்று மேலும் ரூ.20 அதிகரித்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல கடந்த வாரம் பல்லாாி ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களாக பல்லாரியின் விலையும் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.50-க்கு விற்பனையானது. பீன்ஸ் கடந்த சில நாட்களாகவே ஒரு கிலோ 100-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளரிக்காய், சேனைக்கிழங்கு விளையும் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.20-க்கு விற்பனையானது. தற்போது ரூ.70-க்கு மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

சேனைக்கிழங்கும் கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆகிறது. தக்காளி விலை யைபொருத்தமட்டில் மிகப்பெரிய அளவில் மாற்றமில்லை. கடந்த சில நாட்களாகவே ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனைக்கு வருகிறது. மேலும் சில காய்கறிகளின் விலை விவரம் கிலோ அளவில் வருமாறு:-

கேரட்- ரூ.50, உருளைக்கிழங்கு- ரூ.35, முட்டைக்கோஸ்- ரூ.20, தடியங்காய்- ரூ.20, மிளகாய்- ரூ.50, தேங்காய்-ரூ.40 முதல் ரூ.50, கத்தரிக்காய்- ரூ.60 பாகற்காய்- ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், வழக்கமாக தீபாவளி பண்டிகை நெருங்கும்போது காய்கறிகளின் விலை அதிகமாக காணப்படும். குறிப்பாக பல்லாரி, சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்கும். இதேபோல தான் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு சில வாரங்களில் வர உள்ள நிலையில் காய்கறிகளின் விலை உயரத் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது தசரா திருவிழா என்பதாலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வெள்ளரிக்காய் விளைச்சல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


Next Story