தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு - உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்


தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு - உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 13 Jun 2023 2:33 AM IST (Updated: 13 Jun 2023 7:26 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

ஈரோடு

கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

கோடை விடுமுறை நிறைவு

2022-23-ம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

கோடை வெயிலின் தாக்கம் கடந்த மாதம் (மே) இறுதியில் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 12-ந்தேதியும் (நேற்றும்), 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந்தேதியும் (நாளையும்) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பள்ளிகள் மீண்டும் திறப்பு

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இத்தனை நாட்கள் கோடை விடுமுறையில் குதூகலித்திருந்த மாணவ-மாணவிகள் நேற்று காலையே பரபரப்பாக பள்ளிகளுக்கு செல்ல தயாரானார்கள். தூங்கி கொண்டிருந்த சிறுவர்-சிறுமிகளுக்கு 'செல்ல அடி' கொடுத்து பெற்றோர் எழுப்பி ஆயத்தப்படுத்தினார்கள்.

அப்படி... இப்படி... என்று சலிப்புடன் வந்த மாணவர்கள், பள்ளி வாசலை தொட்டதுமே பரவசம் ஆனார்கள். தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆசிரியர்களை பார்த்து நலம் விசாரித்தனர். புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் வகுப்புக்குள் நுழைந்தனர்.

அனைத்து பள்ளிகளிலும் நேற்று புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கோடை விடுமுறைக்கு பின்னர் வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

ஈரோடு

ஆசிரியர்களை பார்த்தும், தங்கள் தோழர்-தோழிகளை பார்த்தும் மகிழ்ந்த மாணவ-மாணவிகள் தங்கள் புதிய வகுப்பறைகளை தேடி உற்சாகமாக சென்றனர். அதிக மாணவ-மாணவிகள் கொண்ட பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் எந்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்று ஆசிரியர்கள் வழிகாட்டினார்கள்.

ஈரோட்டில், பன்னீர்செல்வம் பூங்கா அருகே அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ரெயில்வேகாலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கலைமகள், செங்குந்தர் உள்ளிட்ட மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள், இடையன்காட்டு வலசு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் காளைமாடுசிலை, காவிரி ரோடு, எஸ்.கே.சி. ரோடு, திருநகர்காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடங்கள் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன.

ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஆசிரியைகள் மாணவ-மாணவிகளுக்கு பூ கொடுத்து வரவேற்றனர். வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமையில் ஆசிரியைகள் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

மாவட்ட கல்வி அதிகாரி

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரையான வகுப்புகள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை 14-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்படும். முறையாக அனைத்து பள்ளிக்கூடங்களும் செயல்படுகிறதா? என்று கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story