அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு: செங்கல்பட்டு ரெயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட முயற்சி - 17 பேர் கைது


அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு: செங்கல்பட்டு ரெயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட முயற்சி - 17 பேர் கைது
x

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு ரெயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட முயற்சி செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பின. குறிப்பாக வடமாநிலங்களில் ரெயில் மறியல் மற்றும் ரெயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள், கடைகள் சூறையாடல் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. செங்கல்பட்டில் இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்த இந்திய வாலிபர் சங்கத்தினர் செங்கல்பட்டு ரெயில்நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது முன்னெச்சரிக்கையாக ரெயில்நிலைய முகப்பில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் அரணாக நின்று உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் அங்கும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய ஒரு பெண் உள்பட 17 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இருப்பினும் செங்கல்பட்டு ரெயில்நிலையத்திற்குள் நுழையும் அனைவரையும் போலீசார் சோதனை செய்து அனுப்பினர்.


Next Story