ஓபிஎஸ் மேல்முறையீடு - சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை


ஓபிஎஸ் மேல்முறையீடு - சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
x
தினத்தந்தி 15 Nov 2023 6:11 AM GMT (Updated: 15 Nov 2023 6:22 AM GMT)

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை,

அ.தி.மு.க. பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சதிஷ்குமார் முன்பு கடந்த 7-ந்தேதி நடைபெற்றது.

அப்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் எண்ணிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை நாளை (வியாழக்கிழமை) தள்ளிவைத்து உத்தரவிட்டனர். மேலும் இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் செயல்பட முடியாத நிலை உள்ளதால் இன்றே விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.



Next Story