கோவையில் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு


கோவையில் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி கோவையில் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கோயம்புத்தூர்

கோவை

புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி கோவையில் பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

புதிய வகை கொரோனா

தற்போது வெளிநாடுகளில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க முன் ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டத்தில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க பரிசோதனையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-

அறிகுறிகள்

கோவையில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் காணப்படுகிறது. வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறிகள் உள்ளவா்கள், அவா்களுடன் தொடா்புடையவா்கள், பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்புடையவா்கள் ஆகியோருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள வட்டார அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழை காலம் என்பதால் கொரோனா அறிகுறிகள் அதிகரித்துள்ளன. எனவே கொரோனா அறிகுறி உள்ளவா்கள் தவறாமல் அரசு ஆஸ்பத்திரிகளில் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன் எச்சரிக்கை

கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு 23 விமானங்கள் தினமும் இயக்கப்படுகின்றன. கொரோனா மீண்டும் பரவி வருவதை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விமான நிலைய வளாகத்தில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர். உள்நாட்டு விமான போக்குவரத்து பிரிவில் பயணிக்க தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சுய உறுதிமொழி சான்றிதழ் அடிப்படையில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

கூடுதல் கண்காணிப்பு

வெளிநாட்டு பயணிகளுக்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களின்பேரில் பயணசீட்டு வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரும் பயணிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பயணிகளுக்கு மட்டும் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் புதிய வகை கொரோனா பரவலை தடுக்க வெளிநாட்டு பயணிகள் உள்பட அனைவரையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் நகரங்களுக்கு வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் வரும் பயணிகள் கூடுதலாக கண்காணிக்கப்படுவார்கள். பரிசோதனைகளும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story