தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருந்து7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாக வாய்ப்பு இல்லைகலெக்டர் சாந்தி தகவல்


தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருந்து7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாக வாய்ப்பு இல்லைகலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 1 Jun 2023 5:00 AM GMT (Updated: 1 Jun 2023 5:01 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி அருகே உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி கிடங்கில் இருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாக வாய்ப்பில்லை என்று கலெக்டர் சாந்தி கூறினார்.

கலெக்டர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே வெத்தலைகாரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக திறந்தவெளி நெல் கிடங்கு அமைந்துள்ளது. இந்த கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக நுகர்பொருள் வாணிப கழக விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தர்மபுரி நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு மற்றும் மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று திறந்தவெளி நெல் கிடங்கிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தரக்கட்டுப்பாட்டு மண்டல மேலாளர் செந்தில்குமார், விழிப்புணர்வு அலுவலர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாயமாக வாய்ப்பு இல்லை

பின்னர் கலெக்டர் சாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் இருந்து அண்மையில் 22 ஆயிரத்து 273 டன் நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலமாக தர்மபுரிக்கு கொண்டு வரப்பட்டது. வெத்தலைகாரன் பள்ளம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் கிடங்கிற்கு இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு 130 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது. இந்த நெல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரவை ஆலைகளுக்கு அவ்வப்போது தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் 7 ஆயிரத்து 174 டன் நெல் மூட்டைகள் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதைத்தவிர 15 ஆயிரத்து 98 டன் நெல் மூட்டைகள் கிடங்கில் இருப்பில் உள்ளன. இதனிடையே 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதாக பரவிய தகவல் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தரக்கட்டுப்பாட்டு குழுவினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். முதல் கட்ட ஆய்வில் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 7 ஆயிரத்து 174 டன் நெல் மூட்டைகளை தான் மாயமாகி இருப்பதாக யாரோ தகவல் பரப்பி இருப்பது தெரியவந்துள்ளது.

மாயமாகி இருக்க வாய்ப்பில்லை

இருந்தபோதிலும் புகாரின் அடிப்படையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை 100 தொழிலாளர்கள் மூலம் 120 லாரிகளில் ஏற்றி அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதேபோல் அரிசி அரவை ஆலைகளிலும் நெல் இருப்பு குறித்து ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

100 சதவீத தணிக்கை செய்யப்பட்ட பின்னரே நெல் மூட்டைகள் ஏதேனும் குறைந்துள்ளதா? என்பது தெரியவரும். முதல் கட்ட ஆய்வின் அடிப்படையில் பார்க்கும்போது 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாகி இருக்க வாய்ப்பில்லை. அது மிகைப்படுத்தப்பட்ட தகவல். இருந்தாலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் சாந்தி கூறினார்.


Next Story