மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற பெயிண்டர் கைது


மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற பெயிண்டர் கைது
x

திருச்சியில் மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருச்சி

திருச்சியில் மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற பெயிண்டர் கைது செய்யப்பட்டார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கல்லைப்போட்டு கொலை

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40), பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சதீஷ்குமார் மீது அரியமங்கலம், கண்டோன்மெண்ட் ஆகிய போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார் சபுராபீவியை பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே பழைய பொன்மலை மகளிர் போலீஸ் நிலையம் பின்புறம் ரெயில்வேக்கு சொந்தமான ஒரு கட்டிடத்துக்கு அழைத்து சென்றார்.

அப்போது, அந்த கட்டிடத்தில் வைத்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் சபுராபீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால் இறுக்கினார். பின்னர் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

வாக்குமூலம்

இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் எனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தேன். இதனால் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு என்னிடம் கோபித்துக்கொண்டு அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் அவரிடம் சமரசம் செய்து மீண்டு்ம் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

ரெயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடம் அருகே வந்தபோது, மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கட்டிடத்துக்குள் இழுத்து சென்று சேலையால் அவரது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் சாகாததால், அவரது தலையில் கல்லைபோட்டு கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். போலீசார் என்னை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story