பல்லவர் கால கல்வெட்டுகள், நடுகல் கண்டுபிடிப்பு


பல்லவர் கால கல்வெட்டுகள், நடுகல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கண்டாச்சிபுரம் அருகே பல்லவர் கால கல்வெட்டுகள், நடுகல் கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வாளர் திருவாமாத்தூர் சரவணகுமார் அளித்த தகவலின் பேரில் வரலாற்று ஆய்வாளர்கள் பாலமுருகன், பழனிசாமி, தண்டராம்பட்டு ஸ்ரீதர், சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் கண்டாச்சிபுரத்தை அடுத்த நல்லாபாளையம் கிராமத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள நிலத்தில் மேற்கு பார்த்தபடி அமைந்துள்ள நடுகல்லை ஆய்வு செய்தனர். இதில் நடுகல்லின் மேல்பகுதியில் 3 வரியில் கல்வெட்டும் கீழ்பகுதியில், வலதுகையில் குறுவாள், இடது கையில் வில் ஏந்திய வீரனின் உருவம் காணப்படுகிறது. இந்த வீரனின் வலதுபுற கால் அருகே ஒரு பெண் உருவமும் காணப்படுகிறது. மேலும் இந்த நடுகல்லில் கோவிசைய நரசிங்க பருமற்கு பத்தாவது கூறங்கிழாரு மக்கள் குமாரசத்தியாரு பட்ட கல் என்று 3 வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 7-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த நடுகல் சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடந்த பூசலில் இறந்த வீரனின் நினைவாக நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நடுகல்லின் வடக்குப் பகுதியில் உள்ள பாறையொன்றில் மேற்கு திசையை நோக்கி புடைப்பு சிற்பங்களும், கல்வெட்டும் காணப்படுகிறது. இந்த சிற்பத்தின் மையப்பகுதியில் மலைக்குள் ஒரு அடியார் தியான நிலையில் அமர்ந்திருப்பது போன்றும் இருபுறமும் சாமரமும் உள்ளது. அதற்கு மேலே வலதுபுறம் விநாயகர், இடது புறம் மயில் மீது அமர்ந்த முருகன் புடைப்பு சிற்பங்களாகவும், இரு புறமும் குத்துவிளக்கும், வலதுபுறம் பிறையும் காணப்படுகின்றன. இந்த சிற்பத்துக்கு அடியில் 2 வரியில் வடயோருடையான் கோவலராயன் பகவான் திருப்பணி என்று வெட்டப்பட்டுள்ளது. இதன்படி வடயோருடையான் கோவலராயன் என்பவர் இந்த சிற்பத்தை வெட்டுவித்ததாக கருதலாம். இதன் காலம் 16 அல்லது 17-வது நூற்றாண்டாக இருக்கலாம். இது வரை கிடைத்த சிற்பத்தில் இது மிகவும் வேறுபட்டதாகவும் தனித்தன்மையுடன் காணப்படுகிறது. தமிழ்நாடு அரசு இந்த கல்வெட்டுகள் மற்றும் நடுகல்லை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story