சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி

சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி
Published on

குடிமங்கலம் பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாழை சாகுபடி

குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறிப் பயிர்கள் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, வாழை, உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் சாகுபடி படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய விலை இல்லாமை, வருமானம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது, ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ள நிலையில் தற்போது சொட்டுநீர் பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதிய முறை

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- வாழை சாகுபடியை பொறுத்தவரை நடவு முதல் அறுவடை வரை ஓராண்டு காலத்தில் பருவ மழை, காற்று, கோடை என எல்லாப் பருவங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.பருவமழை போதுமான அளவில் பெய்யாத ஆண்டுகளில் கடும் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.அதுபோன்ற சூழலிலும் வறட்சியால் பயிர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது வாழை மரங்கள் தான் முதலில் பாதிக்கப்படுகிறது இதனால் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாவதுடன் கடும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை உள்ளது.இதனால் தான் பல விவசாயிகள் வாழை சாகுபடியை கைவிட்டு காய்கறி உள்ளிட்ட மாற்றுப் பயிர்களுக்கு மாறிவிட்டனர். இந்த நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வாழை சாகுபடியில் ஈடுபடும் போது இழப்பை தவிர்க்க முடியும் அந்த வகையில் சொட்டுநீர்ப்பாசனம் மூலம் வாழை சாகுபடி மேற்கொள்ளும் போது கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை அதுபோல காற்றிலிருந்து வாழை மரங்களை பாதுகாக்க புதிய யுத்திகளை பயன்படுத்துகிறோம். அதன்படி ஒவ்வொரு மரத்துக்கும் ஊன்று கோல்கள் கொடுத்து பாதுகாப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஊன்றுகோல்கள் அமைத்து மற்ற வாழைகள்எல்லாம் பிளாஸ்டிக் கயிறுகள் மூலம் எதிரெதிரான திசைகளில் ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டி விடுகிறோம். இவ்வாறு கட்டுவதால் எந்தத் திசையிலிருந்து காற்று பலமாக வீசினாலும் வாழைகளுக்கு ஏதும் ஏற்படுவதில்லை செலவும் குறைகிறது. இதன் காரணமாக வாழை சாகுபடி லாபகரமானதாக உள்ளது என்று விவசாயிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com