மருத்துவமனை கண்ணாடி கதவை உடைத்ததால் பரபரப்பு
விஷம் குடித்த தொழிலாளியை பார்க்கவந்த மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மருத்துவமனை கண்ணாடி கதவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடும்ப பிரச்சினை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி(வயது 38). கூலி தொழிலாளியான இவர் கடந்த 10-ந்தேதி தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சி மருந்து (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாலாஜியை பார்ப்பதற்காக அவரது மனைவி நேற்று மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
கண்ணாடி கதவு உடைப்பு
அப்போது பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த பாலாஜி அவசர சிகிச்சை வார்டில் உள்ள கட்டில் மற்றும் கண்ணாடி கதவினை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாலாஜியை மீட்டு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மீண்டும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.