தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா:சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயில்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அந்த ரெயிலுக்கு சனிக்கிழமை முதல் முன்பதிவு தொடங்குகிறது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலய தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு சென்னை- தூத்துக்குடி இடையே மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று(சனிக்கிழமை) தொடங்குகிறது.
தங்கத்தேர் திருவிழா
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் இந்த ஆண்டு தங்கத்தேர் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா இந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தூத்துக்குடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ரெயில்வே பொதுமேலாளரை வலியுறுத்தினார். அதன்படி ஏற்கனவே ஒரு சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்தது.
அந்த சிறப்பு ரெயில் (06005) ஆகஸ்ட் 3-ம் தேதி மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும். இதுபோன்று மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் (06006) தூத்துக்குடியில் இருந்து ஆகஸ்ட் 4-ந் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சென்றடையும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இதில் 3-ந் தேதி தூத்துக்குடி வரும் சிறப்பு ரெயிலில் தற்போது படுக்கை வசதி கொண்ட இருக்கை முழுமையாக நிரம்பி காத்திருப்போர் பட்டியலில் 47 பேர் உள்ளனர். இதனால் ஏ.சி. பெட்டிகளில் உள்ள இருக்கைகள் தற்போது நிரம்பி வருகின்றன.
சிறப்பு ரெயில்
இந்த நிலையில் தங்கத் தேரோட்டம் ஆகஸ்ட் 5-ந் தேதி நடப்பதால், அதில் பங்கேற்கும் பக்தர்கள் ஊருக்கு திரும்பி செல்வதற்கு வசதியாக மேலும் ஒரு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று மேலும் ஒரு சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு ரெயில் (06001) ஆகஸ்டு 5-ம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறுமார்க்கத்தில் சிறப்பு ரெயில் (06002) ஆகஸ்டு 6-ம் தேதி இரவு 9.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் தூத்துக்குடி மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.