காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி சாவு: நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டம்


காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி சாவு: நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டம்
x

காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி திடீரென இறந்து விட்டார். இதையடுத்து நிவாரணம் கேட்டு அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

தொழிலாளி சாவு

கரூர் மாவட்டம், கடம்பங்குறிச்சி அருகே உள்ள சின்னவரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). இவர் கடந்த 28 ஆண்டுகளாக புகழூர் காகித ஆலையில் ரோலிங் பிரிவில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சக்திவேல் ஆலையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு காகித ஆலை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சக்திவேலின் மனைவி மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

போராட்டம்

இதையடுத்து நேற்று காலை சக்திவேலின் உறவினர்கள் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடம் முன்பு கூடி நின்று, சக்திவேலின் இறப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு காகித ஆலையில் வேலை வழங்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாத்துரை, புகழூர் தாசில்தார் முருகன், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், காகித ஆலை முதன்மை மேலாளர் சிவக்குமார் மற்றும் காகித ஆலை அதிகாரிகள், வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

அப்போது, இறந்த சக்திவேலின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் மற்றும் மகேஷ்வரிக்கு மாதாமாதம் ரூ.4 ஆயிரம் வாழ்வாதாரத் தொகையாக தருவதாகவும், காகித ஆலையில் சக்திவேலின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க மனு கொடுங்கள் என்றும் காகித ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து சக்திவேலின் குடும்பத்தினர் மனு எழுதி கொடுத்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சக்திவேலுக்கு காவியா (23) என்ற மகளும், கிரிநாத் (21) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story