பயணிகள் நிழலகம் புதிதாக அமைக்க வேண்டும்
மணல்மேடு அருகே பயணிகள் நிழலகம் புதிதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்மேடு:
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே பட்டவர்த்தி - மயிலாடுதுறை செல்லும் சாலை உள்ளது. இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மயிலாடுதுறை, சீர்காழி மணல்மேடு, பட்டவர்த்தி வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த சாலையில் வில்லியநல்லூர் என்ற கிராமத்தில் மல்லியக்கொல்லை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே ஒரு பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த பயணிகள் நிழலகத்தின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்தால் பஸ் நிறுத்த கட்டிடத்திற்குள் பயணிகள் நனைந்து கொண்டே பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை ஏற்படுகிறது. மேலும் பயணிகள் அமர்வதற்கான சிமெண்டு கட்டையும் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. எனவே மேற்கண்ட இடத்தில் பயணிகள் நிழலகத்தை புதிதாக அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.