எழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பரிதவிக்கும் பயணிகள்


எழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பரிதவிக்கும் பயணிகள்
x

சென்னை எழும்பூர் பஸ் நிலைய வளாகத்தில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளால் பயணிகள் பரிதவித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று எதிர்பார்ப்பும் தெரிவித்துள்ளனர்.

சென்னை

சென்னை எழும்பூர் வடக்கு பஸ் நிலைய வளாகத்தில் இருந்து வில்லிவாக்கம், திருவொற்றியூர், கோயம்பேடு, பூந்தமல்லி, வடபழனி, ஆவடி, திருநின்றவூர், திருவேற்காடு, மாங்காடு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வடசென்னையில் இருந்து சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பஸ் மார்க்கமாக பயணிகள் வந்தடையும் முக்கியமான மையமாகவும் விளங்குகிறது.

மேலும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் பிரதான இடமாகவும் இந்த பஸ் நிலைய வளாகம் செயல்படுகிறது. இதனால் எந்நேரமும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகவே எழும்பூர் வடக்கு பஸ் நிலைய வளாகம் காணப்படுகிறது.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் போடப்பட்டிருக்கும் சாலைகள் தான் திருஷ்டி பொட்டு வைத்தது போல ஆகியிருக்கிறது. எழும்பூர் வடக்கு பஸ் நிலையத்தில் பல பகுதிகளில் பல்லாகுழியாகவே காட்சி தருகிறது. சில இடங்களில் பள்ளங்கள் இடையே கம்பி நீட்டிக்கொண்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த பள்ளங்களை பார்த்தாலே பாதசாரிகள் பயந்துபோகிறார்கள்.

இந்த பள்ளங்களில் பஸ் ஏறி-இறங்கினாலே, அந்த பஸ்சில் பயணிக்கும் பயணிகள் 'ஒட்டக சவாரி' போனது போல உணர்கிறார்கள். அந்த சமயங்களில் வயதானவர்கள் ஏதாவது ஒரு கம்பியை பிடித்துக்கொண்டால் தப்பிக்கலாம். அதேவேளை பஸ்சில் நின்றுகொண்டு பயணிப்போரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். பஸ்கள் தவிர அந்த வழியாக செல்லும் இதர வாகனங்களும் இதை எதிர்கொண்டு தான் செல்கின்றன.

இந்த பிரச்சினை பல மாதங்களாவே காணப்படுவதாகவும், யாரும் நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை என்றும் பயணிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

எழும்பூர் வடக்கு பஸ் நிலையத்தில் சாலைகள் படுமோசமாக காணப்படுகிறது. இந்த பிரச்சினையை இதுவரை தீர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. இதுபோன்ற பள்ளங்கள் பல நேரத்தில் ஆபத்தையும் விளைவித்து விடுகின்றன. மழைக்காலங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் பலர் தடுமாறி விழுந்திருப்பதை பார்த்திருக்கிறோம்.

இதுதவிர மாலை மற்றும் இரவு வேளைகளில் பல மின்விளக்குகள் எரிவதே கிடையாது. இதனால் இருளிலேயே பஸ்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. காதலர்கள் தவிர மற்ற அனைவருமே இதனால் சிரமத்தை தான் எதிர்கொள்கிறோம்.

எனவே எழும்பூர் வடக்கு பஸ் நிலையத்தில் காணப்படும் இந்த நீண்டகால பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பயணிகள் நலன் காக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story