நடைபாதை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்


நடைபாதை ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Sept 2023 3:45 AM IST (Updated: 26 Sept 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

உல்லத்தி மேலூரில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நடைபாதையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

நீலகிரி

ஊட்டி,செப்.26-

உல்லத்தி மேலூரில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நடைபாதையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள், தனியார் அமைப்பினர், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். உல்லத்தி ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஊட்டி அருகே உல்லத்தி மேலூரில் தனியாருக்கு சொந்தமாக 2 சென்ட் பட்டா நிலம் உள்ளது. ஆனால், அவர் ஊர் பொது வழிப்பாதையை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகிறார். தற்போது அரசு நிலத்தை மேலும் அபகரிக்கும் வகையில் நடைபாதையை அடைத்து, பொது குடிநீர் தொட்டி அருகில் கழிப்பறை மற்றும் கழிப்பறை தொட்டி கட்டி வேலியும் அமைத்து உள்ளார்.

மீட்க வேண்டும்

இதற்கு ஊர் பொதுமக்களாகிய நாங்கள் ஆட்சேபனை தெரிவித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு அனுப்பினோம். இந்தநிலையில் நிலத்தை ஆக்கிரமித்தவரின் உறவினர் ஒருவர் அரசு பணியில் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுத்து உள்ளார்.இதற்கிடையே பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லை எனக் கூறி நாங்கள் அந்த குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான பொது நடைபாதையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story