நடைபாதை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்


நடைபாதை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Aug 2023 10:30 PM GMT (Updated: 21 Aug 2023 10:30 PM GMT)

குன்னூரில் நடைபாதை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூரில் நடைபாதை சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.

நடைபாதை

குன்னூர் நகராட்சி 11-வது வார்டில் பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் மக்களின் வசதிக்காக கால்வாயுடன் கூடிய நடைபாதை நகராட்சி மூலம் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே அந்த நடைபாதை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி சார்பில் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபாதையை சீரமைப்பதற்காக ஜல்லி, மண் போன்ற கட்டுமான பொருட்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டன.

கையெழுத்து இயக்கம்

தொடர்ந்து நடைபாதை சீரமைப்பு பணி தொடங்கி நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பணி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பணிக்காக நடைபாதையில் கட்டுமான பொருட்கள் கொட்டப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். அந்த வழியாக நடந்து செல்லும் போது தவறி, கழிவுநீர் கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது. உடனடியாக கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை சீரமைப்பு பணியை தொடங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அந்த மனு நகராட்சி அதிகாரிகளிடம் வழங்கப்பட உள்ளது. அதன் பின்னராவது நடைபாதை சீரமைப்பு பணி விரைந்து முடிக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


Next Story