திமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர் - முன்னாள் அமைச்சர் தங்கமணி


திமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர் - முன்னாள் அமைச்சர் தங்கமணி
x
தினத்தந்தி 16 Sep 2022 4:09 PM GMT (Updated: 16 Sep 2022 4:09 PM GMT)

திமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினர்.

அப்போது அவர் கூறியதாவது,

ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது. கல்லூரி மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக லேப்டாப் திட்டத்தை கொண்டு வந்தார். அதையும் நிறுத்தி விட்டனர். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் விலை ஏறி உள்ளது. குறைக்கவில்லை. எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்து விட்டு ஏமாற்றி விட்டனர்.

மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. முதியோர் உதவித்தொகை வழங்குவதையும் குறைத்து விட்டனர். திமுகவின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர். எங்கு சென்றாலும் எப்போது அம்மா ஆட்சி வரும் என்று என்னிடம் கேட்கின்றனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் 1500 கொலைகள் நடந்துள்ளது. கொலையாளிகளுக்கு சட்டம் குறித்து பயமில்லை. வீதிக்கு வீதி லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறது. நம்ம வீட்டு குழந்தைகள் டாஸ்மாக் கடைக்கு செல்லும் நிலை உள்ளது. இதை நீதிமன்றமே கண்டித்து உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆக இருந்த பொழுது ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தார். நூல் விலை ஏறி உள்ளது. நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் இலவசம் மின்சாரம் தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரையில் தரவில்லை.

இதனால் விசைத்தறிகள் பழைய இரும்பு கடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லை ஆனால் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டு இருந்து வருகிறது.

அதிமுக.வில் ஒற்றை தலைமை வேண்டும் என்பது எல்லோருடைய கருத்தும் ஆகும். ஆனால் ஓபிஎஸ் அவர்களை திமுக தூண்டிவிடுகிறது. எப்படியாவது இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கிறார்கள். ஒருபோதும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் நன்றாக இருந்ததில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story